Wednesday, August 21, 2024

திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி செய்வது எப்படி?

திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

நெய் 5 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
பாசுமதி அரிசி 3 கப்
வெங்காயம் 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு விழுது 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
புதினா 1 கைப்பிடி
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு :
சிக்கன் - அரை கிலோ 
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

பிரியாணி மசாலா பொடிக்கு :
சோம்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4 

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். 

அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். 

பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும். 

பின்பு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி தழை, புதினா, தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். 

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான தலப்பாகட்டு சிக்கன் பிரியாணி ரெடி...

#திண்டுக்கல்பிரியாணி

Tuesday, August 13, 2024

மண் பானை உணவு

ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள் அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள். அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் எவர்சில்வர் பாத்திரத்திற்கு மாறினார்கள் எவர்சில்வர் பாத்திரத்தில் சமைத்தவர்கள் நான்ஸ்டிக் பாத்திரத்திற்கு மாறினார்கள்..

இதில் விஷயம் என்னான்னா பணக்காரர்கள் பணம் வரவர ஒவ்வொன்றுக்கும் மாறிக்கொண்டே போனார்கள் மண்பாண்டத்தில் சமைத்தவர்களை பார்த்து முகம் சுழித்தார்கள், உங்க வீட்டில் நான்ஸ்டிக் இல்லையா? அது இருந்தால் எண்ணெய்யே இல்லாமல் தோசை , சப்பாத்தி சுடலாம்.  குக்கர் இருந்தால் சீக்கிரம் சமையல் செய்திடலாம் அப்படிங்கிற மனநிலை நிறைய பேரிடம் இருந்தது.  அப்ப இந்த வசதி குறைந்தவர்கள் மனசுக்குள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள்.. நாம எப்ப இந்த மாதிரி அழகான கண்ணை கவர்கின்ற பாத்திரத்தில் சமைக்கப் போறோம் கண்டிப்பா நாமளும் நல்லா பணம் சம்பாதிச்சு இந்த நான்ஸ்டிக் பாத்திரம் வாங்கி நம் கிச்சனை அழகுப்படுத்தணும்னு கனவு கண்டவர்கள் ஏராளம். ஓரளவுக்கு அவர்களுக்கு வசதி வர வர அவர்களும் ஒவ்வொன்றுக்கும் மாறிக்கொண்டே வர.. நான்ஸ்டிக் பாத்திரம் வாங்கலாம்னு நினைக்கையில் பழைய குருடி கதவை திறடிங்கிற கதையா இந்த பணம் உள்ளவர்கள் எல்லாம் மண்பானையில் சமைத்தால் தான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்றாங்க.. இனிமே நாங்க மண்பானையில் தான் சோறாக்கி குழம்பாக்கி விளையாட போறோம்னு சொல்ல, அதற்கு தகுந்த மாதிரி மண்பாண்டம் விற்பனை செய்தவர்களும் குடிக்கிற தண்ணி பாட்டில் ஆரம்பித்து கடைசியா சுடுகாட்டில் உடைக்கிற கொள்ளிக்குடம் வரைக்கும் நல்ல டிசைனா செய்ய தொடங்கி, இப்ப அதன் விலையும் பார்த்திங்கன்னா 30 ரூபாய்க்கு வாங்க ஆளில்லாமல் இருந்த மண்சட்டி இன்னைக்கு 200 ரூபாய் தோசைக்கல், ஆப்ப சட்டி இட்லி பானையின்னு எல்லாமே விலை ஏறிப்போச்சு.

கடைசியில நான்ஸ்டிக் பாத்திரம் வாங்க ஆசைப்பட்டான் பாருங்க அவன் யோசிக்கிறான். 'ஏன்டா நான் சிவனேன்னு மண் சட்டியிலதான் குழம்பு வைச்சு சாப்பிட்டேன்.. என்னை அற்பமா பார்த்தே.. இப்ப நான் அவ்வளவு தூரம் ஓடிவந்து நான்ஸ்டிக் வாங்க வரும் போது நீ மண்பானைதான் நல்லதுன்னு சொல்லி வாங்குறீயே இப்ப நான் என்னத்தடா வாங்குறது? நான்ஸ்டிக் விலைக்கு மண்சட்டி விக்கிது.. என்னால நான்ஸ்டிக்கும் வாங்க முடியல, மண்சட்டியும் வாங்க முடியல'ன்னு தலையில கைய வைச்சிக்கிட்டு உக்காந்துட்டான் . வாழ்க்கை ஒரு வட்டங்கிறது எவ்வளவு உண்மை பாருங்க.  

ஆதிகாலத்தில் நாம் சாப்பிட்ட சாப்பாடு நம் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் எல்லாமே ஆரோக்கியமானது கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பழமையை நோக்கித்தான் வர்றோம். ஆரம்பத்தில் சாம்பலை போட்டு பல் விளங்கினார்கள் அதில் சாம்பல் சத்தும் உப்பு சத்தும் இருந்துச்சு, வேப்பங்குச்சியும் ஆலங்குச்சியிலும் பல் விளக்கினார்கள் இப்ப உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா? வேம்பு இருக்கா கிராம்பு இருக்கான்னு ஓடி வர்றாங்க. 

இருப்பது அப்படியே இருந்திருக்கலாம்.. விலைவாசியும் அப்படியே இருந்திருக்கும். எல்லாத்தையும் மாத்தி எல்லாத்தையும் உயர்த்தி கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ சாதாரண மக்கள் தான். யார் யாரை ஏமாற்றுகிறார்கள் எல்லாமே வியாபாரம் நோக்கமா இல்லை மக்களே தன்னை மாற்றிக் கொள்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை. நவீன வியாபார உலகத்தில் விற்கப்படுவது வெறும் பொருட்கள் மட்டுமல்ல மனித உயிர்களும் தான்...

நாம் சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும்போது தன் சொந்த இனத்தாரிடத்தில் பெண் பார்க்க சொன்னாரே! ஆக, நாம் சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்: சாதி உணர்வுடைய 'கிறிஸ்தவ போதகர்கள்' பலர் தங்கள் சாதி வக்கிரப் பண்பாட்டை நியாயப்படுத்த, "ஆபிரகாம், ஈசாக்கு போன்ற ஆன்மீகவாதிகள் சாதி வேறுபாட்டுக் கொள்கையின் அடிப்படையில்தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துள்ளனர்" என்று போதித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவுடைய இறைமக்கள்கூட அதை இறைவார்த்தையோடு ஆராயாமல், அப்படியே கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இந்த சமூக விரோதக் கருத்து சரியா தவறா என பைபிள் வெளிச்சத்தில் ஆராயவேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்தவர்களுக்குள் இன்று காணப்படும் எல்லா சாதிச் சண்டைகளுக்கும் ஆபிரகாம், ஈசாக்கு போன்றோரே காரணம் என்றாகிவிடும். கடைசியில் சமூக சமத்துவத்தைத் தேடும் மக்கள் கிறிஸ்துவிடம் வைத்திருக்கும் அபிமானமும் அழிந்துவிடும்.

முதலாவது, ஆபிரகாம் தன் வேலைக்காரன் எலியேசரை அனுப்பி, தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடிய சம்பவத்துக்கு வருவோம். 

ஆபிரகாம் தன் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தனக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை (எலியேசர்) நோக்கி, "விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இந்த கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும், சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்" என்றார் (தொட. 24:3,4).

அதுபோலவே, ஈசாக்கு தன் மகன் யாக்கோபு யாரைத் திருமணம் செய்யச் சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கி கட்டளையிட்டுக் கூறியது: "நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே. புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்" (தொட. 28:1,2).

இதேபோல, இஸ்ரவேலர் அல்லாத வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது என குரு எஸ்ராவும், இறைவாக்கினர் நெகேமியாவும் அறிவுறுத்துகிறார்கள்.

குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: "நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள். எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் (எஸ். 10:10,11).

"வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்யவேண்டுமா?" (நெகே. 13:27) என்று இறைவாக்கினர் நெகேமியா கூறுகிறார்.

நீதித்தலைவர் சிம்சோன் ஒரு பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்தபோது, அவரது பெற்றோர் அவரை நோக்கி, "உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்கவேண்டும்? என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், "அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில், அவளை எனக்குப் பிடித்திருக்கிறது" என்றார் (நீ.த. 14:3)

மேற்கண்ட எல்லா வசனங்களிலும், இஸ்ரயேலர் அல்லாத பிறரை இஸ்ரயேலர் திருமணம் செய்யக்கூடாது என்று அக்கால ஆன்மீக வழிகாட்டிகள் போதித்திருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க நியாயப் பிரமாணத்தில் தேடுவோம்.

ஆண்டவர் மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றுப் புறப்படச்செய்து, கானான் நாட்டைநோக்கி அவர்கள் பயணிக்கும்போது, திருமணம் செய்வது தொடர்பான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினார். அப்போது, கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் பேசிய கீழ்க்காணும் வசனங்களைக் கவனமாக நீங்கள் வாசித்தால் அந்த காரணம் தெளிவாக விளங்கும். அது எதற்காக என்று தெளிவாக கடவுளே சொல்கிறார்.

"நீ அவர்களோடு (இஸ்ரயேலர் அல்லாதவரோடு) திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னை பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்" (இணை. 7:3,4) என்று கடவுள் சொல்கிறார். 

இந்த இறைச்சட்டத்தை மனதில் வைத்தே திருத்தூதர் பேதுரு, கொர்நெலியுவின் வீட்டாரிடம், "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் (வேற்று ஆன்மீக நம்பிக்கை உடையவரிடம்) செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள்" (பணி. 10:28) என்கிறார். இதனாலேயே யூதர்கள் சமாரியருடன் பழகுவதில்லை (யோவா. 4:9) என்று மறைநூல் பதிவு செய்கிறது.

மேற்கண்ட வசனங்களின்படி, இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளாகிய ஆண்டவரை வழிபடாத வேற்றினத்தாரை திருமணம் செய்தால், இஸ்ரயேலர்களை வேற்றினத்தார் உண்மையான கடவுள் வணக்கத்திலிருந்து விலக்கி, பொய்யான தெய்வங்களை (சிலைகளை) வணங்கும்படி மாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தால்தான் அவர்களைத் திருமணம் செய்யவேண்டாம் என கட்டளையிட்டார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

புதிய உடன்படிக்கையிலும் இதையே திருத்தூதர் பவுல், "கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்துகொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருக்க வேண்டும்"(1கொரி. 7:39) என்று உறுதி செய்கிறார்.

நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. "என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!" என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! (2கொரி. 6:14-16) என்று திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார்.

கடவுளிடம் இப்படி ஒரு கொள்கை இருப்பதை தெரிந்திருந்த இறையடியார்கள், கடவுளின் வழிகாட்டுதலின்படி தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இறைநம்பிக்கையை தழுவிய மணமக்களையே திருமணம் செய்தனர். அந்த வகையில்தான், ஆபிரகாம், ஈசாக்கு என்போர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டவரைக் கடவுளாக கொண்ட இணையர்களை தேர்வு செய்தனர். இதை மனதில் வைத்துத்தான் குரு எஸ்ரா, இறைவாக்கினர் நெகேமியா போன்றவர்களும் அப்படி போதித்தனர். ஆக, இஸ்ரயேலர் புறவினத்தாரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்ன காரணம், புறவினத்தார், இஸ்ரயேலரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு மட்டும்தானேதவிர, உயர்சாதி கீழ்சாதி என்ற வருணாசிரமப் பாகுபாடுகளல்ல. மறைநூல் போற்றும் இந்த உயர்தர ஆன்மீக கொள்கைக்கும், இந்துத்துவ சாதியத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நுட்பமாக அறிகிறோம்.

கடவுள் தன்னை பின்பற்றும் மக்கள் தன்னை மட்டும்தான் கடவுளாக வழிபடவேண்டும் என்றும், தன்னை கடவுளாக வழிபடும் மக்கள் பிற ஆன்மீக நம்பிக்கையாளர்களை திருமணம் செய்யக்கூடாது என்னும் சித்தாந்தமுடையவர். அதனால்தான், "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோவேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன். என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பேன்" (விடு. 20:3-5) என்று கடவுள் எச்சரிக்கிறார்.

"நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் 'வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்' என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் வேற்று தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்" (விடு. 34:14) என்றும் "வேற்று தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்கமாட்டேன்" (எரே. 25:6) என்றும் கடவுள் கூறுகிறார்.

அரசர் சாலமோனின்
சோகமுடிவுக்கு காரணம்

தாவீது அரசருடைய மகன் சாலமோனுடைய வாழ்வில் அவர் கடவுளின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படியாமல் யூதரல்லாத பலரை திருமணம் செய்ததால், அவரது வாழ்வின் பாதைமாறி சீர்கெட்டுப் போன வரலாற்றை ஆராய்வோம். 

அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார். அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், "நீங்கள் அயல் நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும்வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கிவிடுவார்கள் என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் காதல் கொண்டிருந்தார். சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும், முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பிவிட்டார்கள். சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.
சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியதுபோன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச்சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, "நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி" என்றார் (1அர. 11:1-11). 

மேற்கண்ட இறைவார்த்தைகளின்படி உண்மையான கடவுளை நம்பாதவர்களை கிறிஸ்தவர்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்துக்கு மிகவும் இடைஞ்சலானது என்பதால்தான் அவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யக்கூடாது என்று அறிகிறோம். இதற்கும் கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் இந்துத்துவ, இஸ்லாமிய சாதிப் பிரிவினைகளை பின்பற்றுவதற்கும் சம்பந்தமில்லை.

பறையர் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவர், நாடார் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இருவரும் ஆண்டவரை வணங்கும்போது அது எப்படி சாத்தியமாகும்? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள், "நான் மரக்காயர் கிறிஸ்தவர், நீ ராவுத்தர் கிறிஸ்தவர், அவர் பட்டாணி கிறிஸ்தவர்" என்று பிரிந்து நிற்பதில் அர்த்தமில்லை. அதுபோல, "நான் நாடார் கிறிஸ்தவர், நீ முதலியார் கிறிஸ்தவர், அவர் பறையர் கிறிஸ்தவர்" என்று கூறுவதிலும் அணுவளவும் அர்த்தமில்லை. 

ஆபிரகாமின் உறவினர் சிலை வழிபாட்டினர் அல்லவா?

இப்போது, ஆபிரகாமின் உறவினர்கள் சிலை வழிபாட்டினர் அல்லவா! என நீங்கள் நியாயமாக ஒரு கேள்வி கேட்கலாம். ஆம். கிட்டத்தட்ட எபிரேயர் எல்லாருமே மெய்க்கடவுள் வணக்கத்திலிருந்து விலகி, சிலை வழிபாட்டினராக வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தார்.

லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் தெய்வச் சிலைகளைத் திருடிவிட்டார் (தொட. 31:19). யாக்கோபின் மாமனார் லாபான் யாக்கோபை நோக்கி, "உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால் என் தெய்வச் சிலைகளை திருடிக்கொண்டது ஏன்?" என்றான் (தொட. 31:30). மேற்கண்ட வசனங்களிலிருந்து ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் பெண் கொடுத்தவர்கள் சிலைவழிபாடு செய்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்கிறோம். 

அவர்கள் உண்மையான கடவுளை அறிந்து, கடவுளின் திருச்சட்டத்தை முழுமையாக அறியாதவர்கள். ஆனாலும், ஆபிரகாம் கடவுளோடு ஆழ்ந்த உறவில் இருந்ததால் அவருடைய உறவினர்கள் அவருடைய கடவுள்மீதும் கொஞ்சம் பற்று வைத்திருந்தனர். இதை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கீழ்க்காணும் இறைவார்த்தைகளை கவனமாக வாசிக்கவேண்டும்.

லாபான் எலியேசரை நோக்கி, "ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னான் (தொட. 24:31); 

லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, "இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக்கூடாது" (தொட. 24:50) என்று கூறினர். 

மேற்கண்ட வசனங்களில் 'ஆண்டவர்' என்ற சொல் ஆபிரகாம் வணங்கிய கடவுளைக் குறிக்கிறது. இதிலிருந்து, ஆபிரகாமின் உறவினர்கள் அடிப்படையில் சிலைவழிபாடு செய்தாலும், உண்மையான கடவுளையும் சிறிதளவு அறிந்திருந்தனர் என்பது புரிகிறது. 

ஆபிரகாமின் வீட்டாருக்கு வாழ்க்கைத் துணையை தேடும்போது அந்த நாட்களில் உலகில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் அறைகுறை நம்பிக்கையுடைய தன் உறவினரைத்தவிர முழுமையான இறைநம்பிக்கையாளர்கள் யாருமே இல்லாமல் இருந்ததால் ஆபிரகாம் தன் உறவினரிடம் சம்பந்தம் வைத்துக்கொண்டார். இதுதான் நிதர்சனமான உண்மையேத்தவிர ஆபிரகாம் சாதி உணர்வாளராக இருந்தார் என்பது உண்மைக்கு புறம்பானது என்று வரலாற்று ஆதாரத்தோடு அறிகிறோம்.

Friday, August 9, 2024

தேங்காய் சட்னி

என்னைக்காச்சும் யோசிச்சு இருக்கீங்களா ஏன் சில ஹோட்டல்களில் மட்டும் தேங்காய் சட்னி மிக நன்றாக இருக்கிறது என்று நம்ம வீட்ல செய்யும்போது மட்டும் மண்ணு மாதிரி இருக்கு அந்த சுவை வரவில்லை என்று அதற்கு தா தேடி பிடிச்சு இந்த பதிவு

🌟 மொத விஷயம் #அரைமுடிதேங்காய் 
பத்தை போடாமல் (சில்லு) துருவி எடுக்கவும் குறிப்பு அந்த அடி பாகத்தில் இருக்கும் தோலை விட்டு விட வேண்டும் இல்லையென்றால் சட்னி கலர் மாறி விடும்  

🌟 கால் கப் அளவு #பொட்டுகடலை அதனோடு சேர்க்கவும்

🌟 எல்லோரும் #பூண்டு அதிகமா சேர்ப்பார்கள் ஆனால் இதன் ரகசியமே பூண்டு கம்மியாகவும் #இஞ்சி அதிகமாகவும் சேர்க்க வேண்டும்

🌟இரண்டு பள் பூண்டுக்கு நான்கு துண்டு இஞ்சி என எடுத்து கொள்ளுங்கள்

🌟 ஒரு 5 #சின்னவெங்காயம்  (குறிப்பு சின்ன வெங்காயம்  கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஹோட்டல் சுவை வரும் )அதோடு இரண்டு #பச்சைமிளகாயும் #தேவைக்குஉப்பு சேர்த்து  தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து (இதுவும் முக்கியம்) நைசாக அரைத்து இறுதியில் ஒரு பிடி கொத்தமல்லி சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி மிக்சியை நிறுத்தவும்

🌟பின்பு வானிலியில்  சிறிது #எண்ணெய்  ஊற்றி #கடுகு பொரிந்ததும் #உளுந்துஜீரகம் 2 #காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு சிவந்ததும் #கருவேப்பிலை  கொத்தை அதன் தலையில்போட்டு  அடுப்பை அணைத்து அரைத்து வைத்திருக்கும் சட்னியில் எண்ணெய் தாளிப்பை கொட்டவும் அவ்ளோ தா  ஹோட்டல்சட்னி ரெடி

🌟 இதில் மிக முக்கியமான விஷயம் தேங்காய் இலசாகவும் இல்லாமல் நன்றாக முத்தினதாகவும் இல்லாமல்
(🌟கண்டிப்பாக #முத்தினதேங்காய் கூடாது கூடவே கூடாது ) 

ஒரு மத்திம நிலையில் உள்ள உதாரணத்திற்கு தேங்காய் வெள்ளையாகவும் இல்லாமல் கருத்து போயிருக்கும் அப்படியும் இல்லாமல் இரண்டுக்கு நடுவில் ஒரு கலர் இருக்கும் அதை எடுக்க வேண்டும் அது #மிகமுக்கியம்  

🌟அடுத்து இஞ்சியும் சின்ன வெங்காயமும் அவசியம் 

சிலர் இது எதுவுமே சேர்க்காமல் தேங்காய் கம்மியாக பொட்டுக்கடலை அதிகமாக அதன் தலையில் இரண்டு பச்சைமிளகாயும் உப்பும் மட்டும் சேர்த்து  அதுவும் முதலிலேயே தண்ணீர் முழுவதையும் சேர்த்து அரைத்து தாளிதம் செய்வார்கள் அது தான் அதோட குறைக்கு காரணம் ..

🌟என்ன #suganraj ஒரு சட்னிக்கு இவ்வளவு பில்டப் தேவையா என்றால் தேவை தான் அத்தநூண்டு ⚓ ஆங்கர் தான் கப்பலையே நிறுத்துது  

🌟நாலு இட்லி சேர்ந்து உள்ள போகனும்னா சட்னி அவசியம் 
 
🌟"சின்ன சின்ன விஷயங்கள் தான் எப்பொழுதும் ஒரு விஷயத்தை மிக அழகாக்கும்  அது மாதிரி சின்ன சின்ன விஷயம் தான் இந்த #வெள்ளைசட்னி, #தேங்காய்சட்னி  #கெட்டிசட்னி #பொட்டுகடலைசட்னி என் பலவிதங்களில் அழைக்கப்படும்  சட்னியின் சுவையை கூட்டும் அதில் சந்தேகம் இல்லை

🌟 இந்த டிப்ஸை பயன்படுத்தி உங்க வீடு சட்னி எப்படி வந்தது என்று கமென்டில் சொல்லவும் 

🐯. Thanks to FB friend (சுட்டது)

Tuesday, August 6, 2024

கூகுள் பீட்சா

பீட்சாவை ஆர்டர் செய்ய ஒரு நபர் பீட்சா ஹட்டுக்கு போனில் அழைக்கிறார்...

ஆண் : இது பீட்சா ஹட்டா?

கூகுள்: இல்லை சார், இது கூகுள் பீட்சா.

ஆண்: நான் தவறான எண்ணை டயல் செய்திருக்க வேண்டும், மன்னிக்கவும்.

கூகுள்: இல்லை சார், கூகுள் பீட்சா ஹட்டை கடந்த மாதம் வாங்கிவிட்டது.

ஆண்: சரி. நான் பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன்.

கூகிள் : நீங்கள் வழக்கமா சாப்பிடும் பீட்ஸா வேண்டுமா, சார்?

ஆண்: வழக்கமா சாப்பிடும் பீட்ஸா என்ன என்று தெரியுமா?

கூகிள் : உங்கள் ஐடி ஐடி தரவுகளின்படி, கடந்த 12 முறை நீங்கள் அழைத்தபோது, ​​ஹார்ட் க்ரஸ்ட் , எக்ஸ்ட்ரா மூன்று சீஸ்கள், சாசேஜ் , பெப்பரோனி, காளான்கள் மற்றும் மீட் பால்ஸ்கள் கொண்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்சாவை ஆர்டர் செய்தீர்கள்.

ஆண்: சூப்பர்! அதுதான் நான் எப்பவும் ஆர்டர் செய்வேன் !

கூகிள் : ஆனால் இந்த முறை நீங்கள் ஒரு முழு கோதுமையில் க்ளூட்டன் கொழுப்பு குறைந்த ரிக்கோட்டா, அருகுலா, சீஸ் , வெயிலில் உலர்த்திய தக்காளி மற்றும் ஆலிவ்கள் கொண்ட பீட்சாவை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கலாமா?

ஆண்: என்ன இது ? எனக்கு சைவ பீட்சா வேண்டாம்!

கூகிள் : உங்க கொலஸ்ட்ரால் சரியில்லை சார்.

ஆண்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

கூகிள் : சார், உங்கள் மருத்துவப் பதிவுகளுடன் உங்கள் வீட்டு ஃபோன் எண்ணையும் ஒப்பீடு செய்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் செய்த இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எங்களிடம் உள்ளன.

ஆண்: சரி, ஆனால் உங்கள் அழுகிய சைவ பீட்சா எனக்கு வேண்டாம்! நான் ஏற்கனவே கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன்.

கூகிள் : மன்னிக்கவும் ஐயா, ஆனால் நீங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ளவில்லை. எங்கள் கிட்ட இருக்கும் ரெக்கார்டஸ் என்ன சொல்லுது என்றால் , 4 மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் மருந்தகத்தில் ஒருமுறை 30 கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள்.

ஆண்: நான் வேறொரு மருந்தகத்தில் இருந்து அதே மாத்திரையை அதிகம் வாங்கியுள்ளேன்;

கூகிள் : அது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் காட்டப்பட வில்லை சார்.

ஆண்: நான் பணமாக செலுத்தி மாத்திரை வாங்கினேன் .

கூகிள் : ஆனால் உங்கள் வங்கி ஸ்டாட்ட்மென்ட் படி அதற்கு நீங்கள் தேவையான பணத்தை எடுக்கவில்லை.

ஆண்: என்னிடம் வேறு பணம் இருந்ததது.

கூகிள் : சட்டத்திற்கு முரணான, அறிவிக்கப்படாத வருமானத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியிருந்தால் தவிர, உங்கள் சமீபத்திய வரிக் கணக்குகளில் அது காட்டப்படவில்லை !

ஆண்: வாட் தி ஹெல் இஸ் திஸ் !

கூகிள் : மன்னிக்கவும் சார், உங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆண்: இனி இந்த கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உபயோகபப்டுத்த மாட்டேன் போதும்! போதும் ! இன்டர்நெட், டி.வி., போன் சர்வீஸ் இல்லாத, என்னை உளவு பார்க்கவோ யாரும் இல்லாத தீவுக்குப் போகிறேன்.

கூகிள் : எனக்கு புரிகிறது சார், ஆனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். அது 6 வாரங்களுக்கு முன்பு காலாவதியாகி விட்டது ...😜😜😜😜😜😜

மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp,Facebook thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!😀😀😀😀😀😀😀😝😝😝😝😛😛😛😛😛

நாளுந்தெரிஞ்ச ஆட்டோக்காரன்

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...

300-ரூபாய்....
200-ரூபாய்க்கு வருமா? 
சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது....

அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?
ரோட்டுக்கடைதான் சார்... 
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்....  

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது....
ஒரு நடுத்தரவயது அம்மா,
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது.... 

வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
இட்லி, தோசை என சாப்பிட்டோம்.

எவ்ளோம்மா?
60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்...
மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ண... 

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...
இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்
என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கணம் மூச்சு நின்றது.....

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.
உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து  விடுங்கள்...
புண்ணியம் நம்மை தேடி வரும்.

            - படித்ததில் பிடித்தது....

Monday, August 5, 2024

மனிதர்களின் எண்ணம்

மனிதர்களின் எண்ணம் 

ஆதிமுதலாய் மனிதனின் எண்ணங்கள் கேடுள்ளதாய் உள்ளது 
என்பதை வேதவசனம்  அறிவிக்கிறது.மனிதனிலுள்ள வஞ்சனை எண்ணம் அவனை நித்தியஜீவனை பெற்று கொள்ள தடையாயிருக்கிறது.

“மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,”
‭‭ஆதியாகமம்‬ ‭6:5‬ 

“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”
‭‭எரேமியா‬ ‭17:9‬ 

“எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.”
‭‭மத்தேயு‬ ‭15:19‬ ‭

மனிதனின் இருதயம் தங்களை ஞானவான் என்றும்,தான் சுத்தமுள்ளவன் என்றும், அவன் வழிகள் செம்மையானவை என்றும் நினைக்கவைத்து வஞ்சிக்கிறது.

“நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.”
‭‭நீதிமொழிகள்‬ ‭3:7‬ ‭

“மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭21:2‬ ‭

“மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭16:2‬ 

“தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.”
‭‭நீதிமொழிகள்‬ ‭30:12‬ 

இப்படிபட்ட வஞ்சிக்கிற இருதயமுடைய மனிதன் தன்னை காத்துகொள்ள தேவனுடைய வழிகளிலும்,கிறிஸ்துவின் உபதேசங்களிலும்,ஆலோசனைகளிலும்  தங்களை ஒப்புகொடுத்து நடக்க வேண்டும் .நமக்கு முன் வருகிற அனைத்து காரியங்களையும் தேவனிடம் ஒப்படைத்து தேவன் அனுமதித்தால் செயல்படுவதே நமக்கு நல்லது.வஞ்சிக்கிற இருதயமுடைய மனிதனால் தனக்கு நன்மை தரும் காரியங்களை தேர்ந்தெடுக்க முடியாது.ஆகவே தேவன் மேலுள்ள விசுவாசத்தையுடைய நாம் தேவனுடைய வழிகளில் நடக்கும் போதே ஜெயம் பெறமுடியும்.தேவவார்த்தையின்படி நமது வாழ்க்கையை சீர்ப்படுத்தி வாழவில்லையெனில் 
பொல்லாத சிந்தையினால் சிக்கி
கொள்வோம்.

“கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭3:3-6‬ ‭‬‬

‭“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
‭‭சங்கீதம்‬ ‭139:23-24‬ 

“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.”“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.”
சங்கீதம்‬ ‭119:1-2, 9, 15-16‬ ,25‭‬‬

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
‭‭ஏசாயா‬ ‭55:8-11

Sunday, August 4, 2024

மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?

மனதை உடைத்த சிறுகதை...!
*மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?*  🤔🤔

யார் மீது தவறு?

காட்சி - 1

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.

விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.

'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினான்.
15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி.

அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. 
ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான்.

 'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.

''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான்.

''உனக்கு விஷயமே தெரியாதா... உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''

''இல்லயே மாமா... என்ன விஷயம்?''

''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியபடியே உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்கயில ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்...' என்று குழம்பிப் போனான்.

''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.

அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.
''என்னத்த சொல்ல... முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்...'' என்றான் கோபத்துடன்!

''முதியோர் இல்லமா... ஏன் வீட்டை விட்டுட்டு...'' என்றாள், ஆச்சரியத்துடன்!

அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,''என்று சொன்ன தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். 
அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.

''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி.
''அமைதி இல்லம்,'' சொன்னவனின் குரல் அதிர்ந்தது.

காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது, 
'அமைதி ஹோம்' போர்டு!

மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான், தீபக். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்...'' என்று கேட்டார்.

''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான். 
ப்ரீதியும், மகனும் மொபைலை நோண்டியபடி இருந்தனர்.

''நீங்க?''

''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்!

அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார்... பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று  சொல்லி, உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர். 

வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன், 
''என்னப்பா இதெல்லாம்... என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான். 

''தீபக்...' அம்மாவின் குரல்.

சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா... இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல,'' என்றபடி, அவனருகில் அவன் அம்மா அமர, ''அம்மா... முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.

அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா... உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே... உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா...'' என்றாள், ப்ரீதி.

''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க... ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா... 

''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...'' என்றவன், 

அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா... சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.

''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா...''

''என்னப்பா ஆனா...'' கோபமாக ஆரம்பித்த வனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளையிட்டவர்,

''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க... நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.

''ஆமாம் தீபக்... உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா... சொன்னா உனக்கு புரியாது. ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வே... 

நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு... வசதியில எந்தவொரு குறையும் இல்ல; 

ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை. 
''மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு; 
எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம். யாரும் ஈடுபாடு காட்டினா தானே... நாள் முழுக்க,  நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது...

''இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே... இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம்... சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே... பேசிப் பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை...

''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா?  ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு...  நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்திய மில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம்.  வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.

''தீபக்... இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது.  செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா,   வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு"

*காட்சி - 2*

கண்ணீரோடு நிமிர்ந்த மகன் தீபக் பேச ஆரம்பித்தான் 

ஏப்பா நீங்கள் திருமணத்திற்கு முன்பே நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய அரசு வேலையில் தானே இருந்தீங்க.தாத்தா சொத்தான விவசாய நிலங்கள் வேறு நிறைய இருந்திருக்கு  இவ்வளவு பணத்தையும்  வைத்துக்கொண்டு பின் ஏன்ப்பா ஒரே பிள்ளை போதும்னு நிருத்துனீங்க?

என்னோடு இன்னும் ஒரிரு குழந்தைகளை பெற்று வளர்த்து படிக்கவைக்க வசதியிருந்தும் தாங்கள்  ஏன் செய்யவில்லை? 

உங்கள் வசதியை வைத்துக்கொண்டு என்னால் இனி  அண்ணன், தம்பி, அக்காள் தங்கைகளை பெறமுடியுமா? 
யாரும் இல்லாதவனா என்னை நீங்கள்  ஆக்கிவிட்டீர்களே அப்பா? தாத்தா வசதி குறைவாயிருந்தும் ஐந்தாறு குழந்தைகளை பெற்று உங்களை எல்லாம் நல்லா வளர்க்கவில்லையா?படிக்கவைக்கவில்லையா? 

நீங்கள் எல்லாம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என எப்படி சந்தோஷமா இத்தனை வருஷமும் இருந்தீர்கள். 

உங்கள் அண்ணன் தம்பி எல்லாம் நிறைய குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா தானேப்பா ஊரில் இருக்காங்க? மற்றவங்க பெரிசா நினைக்கனும்னு என்னையும் ஹாஸ்டல தங்க வைத்து படிக்க வைத்து படிப்பு படிப்பு என்று என் இளமையில் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சந்தோஷமும் இல்லாமல் செய்தீங்களேப்பா. உங்களுக்கு பிறகு எனக்கு யாருப்பா இருக்கா?

எனக்கு நல்ல வேலைக் கிடைத்தும் அங்கே போனால் உங்களுக்கு துரோகம் செய்கின்றோமோ என்று என்னை என் மனசாட்சி தினம் தினம் கொல்றது உங்களுக்கு தெரியாதுப்பா. 
அங்கேயும் வந்து தங்கமாட்டேன் என்கின்றீங்க.

என் மனைவி, அவள் வீட்டில் அவளும் ஒரே பெண். அவள் அப்பா அம்மாவுக்கும் உங்களை போன்ற நிலைதான்.  என்னைப் போன்றே அவளும் அவுங்க அப்பா அம்மாவை வயதான காலத்தில் பக்கத்தில் வைத்து பாதுகாக்க முடியவில்லையே என்ற கவலை. இது எல்லாம் எங்கள் தவறாப்பா?

ஒரே பிள்ளையான என்னையும் நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம் என, என்னை ஹாஸ்டல்ல தங்கவைக்கும் போது நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா?

 நீங்க, அம்மா, எவ்வளவு பெரிய வீடு,சித்தப்பா பையன், பெரியப்பா புள்ளைங்கயென அவ்வளவு பேர் இருந்தும், என்ன சின்ன வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்பது உங்களுக்கு தெரியாதுப்பா? அப்பயும் இதே போல பெரிய வீட்டில் நீங்களும் அம்மாவும் மட்டும்தானேப்பா இருந்தீங்க? 
அப்ப தோனலையாப்பா நம் பிள்ளை நம்மோடு தங்கியிருந்து படிக்கவைக்க வேண்டும் என்று?

நம்ம சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே நம் நிலங்களில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு, படிப்புக்கு ஏத்த ஒரு வேலையையும் அங்கேயே தேடிக்கிட்டு சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பிள்ளை என நம்ம சொந்த பந்தத்தோட நானும் நிம்மதியா இருந்திருப்பேன். 
நீங்களும்  கடைசி காலத்தில் நிம்மதியா இருந்திருக்கலாமேப்பா? நம்ம சித்தப்பா பெரியப்பா பிள்ளை எல்லாம் வசதி குறைவா இருந்தாலும் கூட்டுக் குடும்பமா நிம்மதியாதானப்பா ஊர்ல இருக்காங்க.

என் புள்ளைய நல்லா படிக்கவைத்து அமெரிக்காவில் வேலைக்கு அனுப்ப போறேன்னு நம் சொந்த பந்தத்திலும், ஊர் முழுவதும் நீங்கள் சொல்லிகிட்டு இருந்ததை நான் என் சின்ன வயசுல பல முறை கேட்டதால்தான் நான் உங்கள் எண்ணத்தை நிறைவேத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து அமெரிக்காவும் போனேன். சென்னையிலும் வீடு வாங்கினேன். 
இப்ப என்னை குறை சொல்றீங்களே... 
இது சரியாப்பா?

ஊர்ல நாலு பேர் பெருசா நினைக்கனும்னு வாழ ஆரம்பித்ததால் இப்ப நம் சந்தோஷத்தையெல்லாம் இழந்தும் வெளில காட்டிக்க முடியாம இருக்கோமேப்பா. 

மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?

அருமையான சிறுகதை.
யார் மீது தவறு?

Friday, August 2, 2024

மிளகு பொங்கல்

மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா... இல்லை சாம்பாரா...

இப்படி ஒரு கேள்வியோட ஒரு பட்டி மன்றம் நடத்தினா உங்க ஆதரவு எந்த பக்கம்... இது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்விதான்... ஆனா என்னை கேட்டா ரெண்டுமே அசத்தலான தொடு உணவுதான்...

பெரும்பாலான மக்களுக்கு காலையில இந்த மிளகு பொங்கல் சாப்பிட கொடுத்தா சாப்பிடவே மாட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இந்த பொங்கல் சாப்பிட்டதுமே பலருக்கு தூக்கம் வந்திடும். அதுக்கு காரணம் பொங்கல்ல நெய் அதிகமா சேர்த்து செய்யறதால இதுல கலோரிகள் அதிகமா இருக்கு.

பொங்கல் சாப்பிட்டதும் செரிமானம் ஆக அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதனால மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைஞ்சு, டேக் டைவர்சன் எடுத்து வயிற்று பக்கம் போகுது. மூளையோட செயல் திறன் குறையறதால தூக்கம் வர்ற மாதிரி ஒரு உணர்வு நமக்கு ஏற்படுது. இந்த பொங்கல் மட்டுமில்ல கலோரிகள் அதிக அளவுல உள்ள எந்த உணவு சாப்பிட்டாலும் நமக்கு இதே போலதான் தூக்கம் வரும். யார் எது வேணா சொல்லட்டும். எனக்கு இந்த மிளகு பொங்கல் ரொம்ப பிடிக்கும்பா 😋...

மார்கழி மாசம் நம்மூர் கோவில்கள்ல பிரசாதமா இந்த மிளகு பொங்கல் கொடுப்பாங்க. சின்ன வயசுல அந்த குளிர்லயும் குளிச்சிட்டு (சில சமயம் குளிக்காம) கோவிலுக்கு போய் சுடச்சுட தர்ற அந்த பொங்கல தொண்ணை இலையில வாங்கி சாப்பிடும் போது, அந்த குளிருக்கு இதமா தொண்டைக்குள்ள இறங்கும். ஒரே ஒரு குறை என்னன்னா, தொட்டுக்க ஒரு சட்டினியோ சாம்பாரோ குடுத்திருக்கலாம் 🤭.

சில ஹோட்டல்ல பொங்கல்ங்கற பேர்ல மஞ்சள் பொடியும் மிளகும் மட்டும் போட்டு கொண்டாந்து ஒரு வஸ்துவை இலையில வைப்பாங்க... இலையில வச்சுட்டா நீ கொடுக்கறதெல்லாம் நாங்க பொங்கல்னு சொல்லி சாப்பிடணும்மான்னு நம்ம வாய் நம்மளை பார்த்து கேவலமா கேட்கும். சாப்பிட்டு முடிச்சதும் வயிறும் கூட சேர்ந்து கழுவி ஊத்தும். இந்த மாதிரி பொங்கல் செய்யற அவங்களையெல்லாம் பிடிச்சி அண்ணனோட 50 வது படத்தை 5 தடவை பார்க்க வைக்கணும் 🤗.

ஒரு நல்ல மிளகு பொங்கலுக்கு உதாரணமே வறுத்து சேர்த்த முந்திரியும் அந்த நெய் மணமும்தான். அப்படியொரு பொங்கல் சாப்பிடணும்னா கண்டிப்பா நீங்க பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும். சில 'என்னமோபவன்' ஹோட்டல்கள்ல இன்னும் மோசம் பண்ணுவாங்க. பொங்கல்ங்கற பேர்ல ஒரு சதுரமான பாத்திரத்துல கொண்டாந்து கொடுப்பாங்க. அதை கவுத்தோம்னா தட்டுல செங்கல்ல தூக்கி வச்சது மாதிரியே இருக்கும். இவனுங்களை என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.

இவ்வளவு பேசறியே நீயே ஒரு நல்ல பொங்கல் ரெசிபி சொல்லேன்னு நீங்க சொல்றது கேட்குது. அதுக்காகத்தான் இந்த ரெசிபி. படிச்சிட்டு கட கடன்னு கிட்சனுக்கு ஓடிப்போய்,  பொங்கல் செஞ்சி தட்டுல போட்டு கொண்டாங்க பார்ப்போம்...

தேவையான பொருட்கள் :

அரிசி : 1 கப் 
பாசிப்பருப்பு : 1/2 கப் 
முந்திரி : 10
மிளகு : 1 1/2 ஸ்பூன் 
சீரகம் : 1 ஸ்பூன் 
நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன் 
இஞ்சி : சிறு துண்டு 
கருவேப்பிலை : 1 கொத்து 
உப்பு : தேவையான அளவு 

செய்முறை :

ஒரு சட்டியில நெய் சேர்த்து அதுல மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நல்லா தாளிச்சு வச்சுடுங்க.

ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊத்தி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து , 5 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிட்டு ஆறினதும் அதுல, தாளிச்சது சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. அவ்வளவுதான் மக்களே...

எவ்வளவு எளிமையான ஒரு செய்முறைன்னு பார்த்தீங்களா 🤗... இதை அப்படியே செஞ்சி ஒரு சட்னியோ, சாம்பாரோ வச்சி சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க 🤗.

உங்களுக்கு மிளகு பொங்கலுக்கு தொட்டுக்க பிடிச்சது சாம்பாரா இல்லை சட்னியான்னு சொல்லுங்க...